நம்பிக்கை... அதானே எல்லாம்!


டி.வி.யை திறக்க முடியவில்லை. ‘பிரைஸ் டாக்கை காபி அடிச்சுட்டாங்க' என்று பிரபு அடித்தொண்டையில் கூவுகிறார். ‘காபி அடிச்சா என்ன? மக்களுக்கு நல்லது நடந்தா சரிதானே?' என்று ஏதோ சமூக சேவை செய்வது போலவே மாதவன் வந்து பதில் சொல்கிறார். இன்னொரு பக்கம் வேட்டி விளம்பரங்கள் நம் டவுசரை கழற்றுகின்றன. ஜெயராமில் ஆரம்பித்து ஜெயம் ரவி வரையிலும் ஆள் ஆளுக்கு வேட்டியை கட்டிக்கொண்டு விறைப்பாக நடக்கிறார்கள். சமீப காலங்களாக தொலைகாட்சிகளில் எந்த சேனலை திருப்பினாலும் திரும்பத் திரும்ப வரும் நகைக்கடை மற்றும் வேட்டி விளம்பரங்களின் இம்சையை நிஜமாகவே தாங்க முடியவில்லை. 



‘தமிழன் எவனும் வேட்டி கட்டுறதே இல்லை' என்று தங்கர்பச்சான் கொந்தளிக்க... எந்தப் பக்கம் திரும்பினாலும் பேண்ட் போட்டத் தமிழர்களின் தலைகளாக தெரிய... வேட்டி விளம்பரங்கள் தாறுமாறாக வருவதன் தர்க்கம் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

எங்காவது அரசியல் கூட்டங்களுக்குப் போனால் வேட்டிகளின் கூட்டம் காணலாம். அது கூட கட்சி கரை வேட்டிகள்தான். ஆனால் இவர்கள் வேட்டியை ஒரு நவநாகரீக உடையாக, வேட்டி அணிந்தால் மரியாதை கூடுவதாக விளம்பரப்படுத்துகின்றனர். யதார்த்தம் அப்படி இல்லையே?
வேட்டிக் கட்டிக்கொண்டு போனால் ஸ்டார் ஹோட்டல் வாட்ச்மேன் கூட உள்ளே விடுவது இல்லை. ஆனால் இவர்கள் வேட்டி கட்டியதாலேயே பிரமாண்ட கட்டடங்களில் உட்கார்ந்து பிசினஸ் பேசுகின்றனர். கூடி நிற்கும் கூட்டம் மரியாதையாக வணங்கி வழிவிடுகிறது. ‘வாவ்' என்று விழி விரிக்கும் இளம் பெண்கள் ஓடிவந்து சூழ்ந்துகொள்கின்றனர். அதிலும் ஜெயம் ரவி ஒரு வேட்டி விளம்பரத்துக்கு வருகிறார். கீழே வேட்டியை கட்டிக்கொண்டு கழுத்தில் டை அணிந்திருக்கிறார். எங்கோ ஒரு பனிப் பிரதேசத்தில் நான்கைந்து ரிச் கேர்ள்ஸுடன் சுற்றி, சுற்றி வருகிறார். என்னங்க‌ சொல்ல வர்றீங்க?

சரத்குமாரும், மோகன்லாலும் வேட்டியை அணிந்துகொண்டு சகட்டுமேனிக்கு ‘கேட்வாக்' செய்கிறார்கள். பிரமாண்ட கட்டடங்களின் முன்பு நின்று, புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போடுவார்கள். ‘தளபதி' பின்னணி இசையுடன் மம்முட்டி நடிக்கும் ஒரு வேட்டி விளம்பரத்தில், கிட்டத்தட்ட 200 குரூப் டான்ஸர்கள் ஆடுகின்றனர்.

வேட்டியில் எந்த டிஸைனும் கிடையாது. யார் தயாரித்தாலும் வேட்டி, வேட்டிதான். வெள்ளை, வெள்ளைதான். ஆனாலும் அதற்கு இவ்வளவு விளம்பரங்கள். ‘வேட்டி அணிந்தால் வெற்றி நிச்சயம்' என்பது நல்ல ‘ஜிங்கில்ஸ்' ஆக இருந்தும் ஏன் இன்னும் யாரும் பயன்படுத்தவில்லை என்று தெரியவில்லை.

மம்முட்டி, மோகன்லால், ஜெயராம், சரத்குமார், அர்ஜுன்... என வேட்டி விளம்பரத்தில் அதிகம் நடிப்பவர்கள் மலையாளிகளும், மலையாள சினிமாவில் செல்வாக்கு உள்ளவர்களும்தான். ஏனெனில் இன்னமும் வேட்டி உடுத்துபவர்கள் கேரளாவில்தான் அதிகம். அங்கு எடுக்கப்படும் விளம்பரங்களை அப்படியே டப் செய்து இங்கும் கொண்டு வந்துவிடுகிறார்கள். இந்த வேட்டி விளம்பரங்களில் வருவதில் எதிர்பாராத முகங்கள் இரண்டு பேர். ஒருவர் ராதாரவி. இன்னொருவர் ‘நீயா நானா' கோபிநாத். எனக்குத் தெரிந்து ராதாரவியை ஒரு டி.வி. விளம்பரத்தில் பார்ப்பது இதுதான் முதல்முறை. கோபிநாத், விளம்பரத்திலும் ‘நீயா நானா?' எஃபெக்டிலேயே கல்லூரி மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கிறார்.

இவர்கள் யாரும் நடைமுறையில் வேட்டி அணிவார்கள் என்று தோன்றவில்லை. அனேகமாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரும், அவரது மைத்துனர் ராதாரவியும்தான் நடைமுறையிலும் வேட்டி அணிபவர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் இவர்கள் யாரையும் விட வேட்டிக்கு சர்வதேச அளவில் இலவச விளம்பரம் செய்பவர்கள் இரண்டு பேர். ஒருவர், ப.சிதம்பரம். ஒரு சால்வையை போர்த்திக்கொண்டு பாராளுமன்ற பின்னணியில் இவர் தரும் பேட்டிகள் மீடியாவில் பிரபலம் என்றால், ஏர்போர்ட், ஏர்போர்ட்டாக தேடிப்பிடித்து கொலைவெறியோடு பேட்டி தட்டும் ‘ஸ்னேக் பாபு நாராயணசாமி வேட்டிக்கு போட்டி போடும் இன்னொருவர்.

இதில் தப்பித்து ரிமோட்டை மாற்றினால் இன்னொரு தாய்மிருகம் நம்மை துரத்தும். கொஞ்ச நாட்களுக்கு முன்பு தன் மொத்த கால்ஷீட்டையும் ‘புரட்சி’க்காக குத்தகைக்கு விட்டிருந்த பிரபு, புரட்சியை நட்டாற்றில் விட்டுவிட்டு, இப்போது ‘ரேட்கார்டு' பக்கம் வந்துவிட்டார். ‘விலைப்பட்டியல் எங்கே?' என்று அவர் அடித்தொண்டையில் கூவினால் தமிழன் டரியல் ஆகிறான். இந்தப் பக்கம் மாதவன் வந்து ‘கிளியர் பிரைஸ் டாக்' என்று பிரபுவுக்கு பல்ப் கொடுக்கிறார். இந்த கேப்பில் புகுந்து வரும் குஷ்பு, ‘எதுக்கு ரேட்கார்டு? நம்ம நகையை நாம் விலைபேசி வாங்குவோம். அது தமிழகத்தின் வீர பாரம்பரியம்' என பேரம் பேசுவதை தமிழர்களின் பாரம்பரிய குணம் போலவே சொல்கிறார். ‘அவங்க சேதாரத்துல ஏமாத்துறாங்க.. இவங்க செய்கூலில ஏமாத்துறாங்க' என்று இவர்கள் விளம்பரத்திலேயே அடித்துக்கொள்ள, ஒரு பவுன் நகையை விற்கப்போனால் அரை பவுனுக்குதான் பணம் தருகிறார்கள். உண்மையில் ஏமாறுவது பிரபுவா, குஷ்புவா... இல்லை மக்களா என்று நமக்கே கன்ஃபியூஸ் ஆகிவிடுகிறது.

மக்களுக்கு இன்னமும் செய்கூலி, சேதாரம் 24 கேரட், கே.டி.எம்., ஹால்மார்க்... போன்ற வார்த்தைகளின் அர்த்தமே முழுதாய் விளங்கவில்லை. அதற்குள் ரேட்கார்டு, பிரைஸ் டாக், கிளியர் பிரைஸ் டாக் என்று புதிய வார்த்தைகளால் மிரட்டுகிறார்கள்.

பெரும்பாலும் ஒரு பெண்ணுக்கு, கோயில் சிலை போல உடம்பு எல்லாம் நகையை போட்டுவிட்டு கேமராவை 360 டிகிரியில் சுழல விடுவார்கள். இதுதான் நெடுங்காலமாக நகைக்கடை விளம்பரங்களின் இலக்கணம். ஆனால் இப்போது இந்த இடத்தை நடிகர்கள் பிடித்துக்கொண்டுவிட்டார்கள். நடிகைகள் கூட இதில் இல்லை. முழுக்க நடிகர்களின் ஆதிக்கம்தான். அதிலும் ‘உன்னை விட நான் பெஸ்ட்' என்று காட்ட வேண்டியிருப்பதால், விளம்பரத்திலேயே மெசேஜ் சொல்கின்றனர்.

மும்பையில் இருந்து அமிதாப்பச்சன் கிளம்பிவந்து ‘நம்பிக்கை... அதானே எல்லாம்' என்று செண்டிமென்ட் பஞ்ச் அடிக்க... கூடவே மருமகள் ஐஸ்வர்யாராயும் பறந்துவந்து அந்தரத்தில் மிதந்து தங்கம் விற்றார். இதற்கு இடையில் நம் இளைய தளபதி விஜய் வேறு பத்து நிமிஷத்துக்கு ஒருமுறை தங்கச்சி பாசத்தை பொழிகிறார். ‘தங்கச்சியை ஆசிர்வாதம் பண்ணும்போது எவ்வளவு நேரம் காலை தொடுதுன்னு அன்பை அளந்தா பார்ப்போம்?' என்று டி.ஆர். எஃபெக்டில் விஜய் கேட்கும்போது எல்லாம் ‘ஐய்யய்யோ... என்னால இந்த கொடுமையை தாங்க முடியலை. என்னை முதியோர் இல்லத்துல சேர்த்திடுங்க' என்று ‘கில்லி'யில் அலரும் விஜய் தங்கை புவியின் ஞாபகம் வந்து தொலைக்கிறது. இதற்கு முன்பு விஜய், அம்மா சென்டிமென்ட்டில் குடும்பப்பாட்டு பாடியதும் ஒரு துன்பியல் சம்பவம்தான். விளம்பரத்தில் செம கல்லா கட்டும் சூர்யா, நகைக்கடையை மட்டும் விட்டு வைப்பாரா? ‘தங்கம் பேசும் மொழியே தனி' என்று கடற்கரை மணலில் படுத்துக்கொண்டு நம்மை தங்கம் வாங்கச் சொல்கிறார்.

இவ்வளவு நகைக்கடைகள் நாட்டில் இருப்பதே விளம்பரங்களை பார்த்தால்தான் தெரிகிறது. ஒவ்வொருவரும் ஒரு நடிகரை பிடித்து வைத்திருக்கிறார்கள். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை புது கான்செப்டில் ஷூட் செய்து ஒளிபரப்புகின்றனர். அந்த அளவுக்கு பணம் கொட்டும் ஏரியா இது. சமீபத்தில் கால்பந்து வீரர் மரடோனா கேரளாவுக்கு ஒரு நகைக்கடை விளம்பரத்துக்கு வந்தார். அவர் எல்லாம் உள்ளூரில் தலையை காட்டினாலே கோடிகளை கொட்ட வேண்டும். கேரளாவுக்கு வந்து கடையை திறக்க எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டிருக்கும்?

இப்போது ஒரு விளம்பரம் வந்துகொண்டிருக்கிறது. ஒரு அய்யர் ஹோமகுண்டலம் வளர்த்து அதில் ‘ஸ்வாகா, ஸ்வாகா' என்று என்று ‘செய்கூலி, சேதாரம்' எல்லாவற்றையும் போட்டுக் கொளுத்துகிறார். இன்னொரு அழகான பெண்ணை தலைகீழாக யோகாசனம் செய்ய வைக்கிறார்கள். ‘தலைகீழா நின்னாலும் இவ்வளவு குறைஞ்ச சேதாரத்துல யாரும் நகை தர முடியாது' என்பது அவர்கள் உணர்த்த வரும் செய்தி. இவர்களின் கற்பனை குதிரை கண்டமேனிக்கு பறப்பதை தடுக்க ஏதாவது வழி இருக்கிறதா?

இவர்கள் எல்லாம் தங்கத்தை வாங்கச் சொன்னால், வாங்கிய நகையை அடகு வைக்கச் சொல்லி அழைக்கிறார்கள் விக்ரமும், மோகன்லாலும். அதிலும் விக்ரம் ‘கையில இருக்கு தங்கம், கவலை ஏண்டா சிங்கம்?' என்று ரொம்ப வீரமாக அடகு வைக்கச் சொல்லி அழைக்கிறார்.
இவற்றை எல்லாம் ஒரு மணி நேரம் பார்த்துவிட்டு இரவு தூங்கப்போனால் வேட்டியும், தங்கமும் நம் மெடூலா ஆப்லங்கேட்டாவை மென்று துப்புவது உறுதி!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதனால் ஆன பயனென்ன..?

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!

கோயில்கள் யாருக்கு? - இந்து சமய அறநிலையத் துறையின் வரலாறு