சாதி சூழ் உலகு- Part II

ந்தியா, இலங்கை, பாகிஸ்தான், அமெரிக்கா... இதெல்லாம் நாடுகள் என்று தெரியும். கப்பலூர், உஞ்சனை, கோனூர்.. போன்ற பெயர்களிலும் 'நாடுகள்' இருக்கின்றன என்று சொன்னால் நீங்கள் நம்ப மறுக்கக்கூடும். ஆனால் உண்மை. தமிழகத்தின் பல பகுதிகள் நாடுகளாக பிரிவுற்றிருக்கின்றன. இது நண்பர்கள் பலருக்குப் பழைய செய்தியாகக்கூட இருக்கலாம். தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளவும், ஒரு ஆவணப்படுத்தும் முயற்சியாகவுமே இந்தக் கட்டுரை.

ஞ்சை மாவட்டத்தின் தெற்குப் பகுதியான ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருவோணம், வடுவூர் பகுதியில் அமைந்திருக்கிற கிராமங்கள் அனைத்தும் 'நாடு' என்ற கட்டமைப்புக்குள் உள்ளடங்கி வருகின்றன. பதினெட்டு அல்லது அதை ஒட்டிய எண்ணிக்கையில் அமைந்த கிராமங்கள், ஒரு நாடாக கருதப்படுகிறது. உதாரணமாக காசவளநாடு என்ற நாட்டிற்குள், பஞ்சநதிகோட்டை, தெக்கூர், புதூர், கோவிலூர், நெல்லுபட்டு, ஆழிவாய்க்கால், காட்டுக்குறிச்சி, கொல்லாங்கரை, வேங்குராயன்குடிகாடு, ஈச்சங்கோட்டை, கருக்காக்கோட்டை, நடுவூர், விளார், கண்டிதம்பட்டு, சாமிப்பட்டி... இப்படி நிறைய கிராமங்கள் உண்டு. இக்கிராமங்களைச் சேர்ந்தவர்கள், தாங்கள் இன்ன நாட்டுக்கு உட்பட்டவர்கள் என்று அடையாளப்படுத்தும்விதமாக தங்கள் ஊருக்கு முன்பு, தங்கள் நாட்டுப் பெயரில் முதல் எழுத்தைப் போட்டுக்கொள்வார்கள்(உ-ம்: கா.புதூர்).

இதே போல கீழ்வேங்கை நாடு, சுந்தரவளநாடு, கோனூர் நாடு.. ஏராளமான நாடுகள் உண்டு. இந்த நாடுகளுக்கு, அதற்குள் அமைந்த ஏதாவது ஒரு கிராமம் தலைமை கிராமமாக இருக்கும். அந்த ஊரில் அந்த நாட்டுக்கென்று ஒரு கோயில் இருக்கும். இந்த நாட்டுக்கோயில்களுக்கு வருடம் ஒருமுறை ஏதாவது ஒரு விழா நாளில் திருவிழா நடக்கும். அந்த நாட்டுக்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள், தங்கள் ஊர்களிலிருந்து காவடி, பால்குடம் எடுத்து, பல கிலோமீட்டர் தூரம் தூக்கிவருவார்கள். பக்கத்து ஊர்க்காரனை விட சிறப்பாக செய்ய வேண்டும் என்று எல்லா வருடமும், எல்லா ஊர்க்காரர்களும் போட்டி போடுவார்கள். நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகளில் கட்டுச்சோறு கட்டிக்கொண்டு மக்களெல்லாம் திருவிழா பார்க்க வருவார்கள். ஒரு வெட்டுக்குத்தாவது இல்லாமல் எந்த திருவிழாவும் முடியாது. இப்போதும் எல்லாம் நடக்கத்தான் செய்கிறது. மாட்டு வண்டிகளின் எண்ணிக்கை குறைந்து கார், டூ வீலர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.. அவ்வளவே.

'ஒவ்வொரு நாட்டுக்கென்றும் ஒரு நாட்டாமை இருப்பார், ஒரு கிராமத்துப் பிரச்னை அவர்களுக்குள் தீர்க்க முடியாமல் கைமீறி போனதென்றால், அந்த நாட்டாமை தலையிட்டு தீர்த்து வைப்பார், அவரது சொல்தான் இறுதி தீர்ப்பு' என்று ஒரு தலைமுறைக்கு முன்பிருந்த நடைமுறையை, இப்போதும் பெருசுகள் பேசிக்கொள்வார்கள். இம்மாதிரியான நாட்டாமை நடைமுறைகள் இப்போதில்லை எனினும், ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுடன் திருமண உறவுகள் வைத்துக்கொள்வதில்லை என்பதுபோன்ற விதிகள், 90 % ஏற்பாட்டுத் திருமணங்களில் கடைபிடிக்கத்தான்படுகின்றன.

இந்த நாடு என்ற அமைப்பு, கிராமங்களை ஒன்றிணைக்கும் நிர்வாக அமைப்பாக இருந்தாவெனத் தெரியவில்லை.. ஆனால், சாதியைக் கட்டிக்காக்கும் சாதனமாக இருந்திருக்கிறது/ இருக்கிறது என்பது மட்டும் உண்மை. நாட்டுக்கோயில்களுக்கு திருவிழா சமயத்தில் அந்தந்த கிராமங்களைச் சேர்ந்தவர்கள் காவடி, பால்குடம் எடுத்துச் செல்வார்கள் என்று பார்த்தோம் இல்லையா..? அதற்காக ஊரெங்கும் ஒரு வீடுவிடாமல் வரி வாங்குவார்கள். குறிப்பிட்ட ரூபாய் அல்லது அதற்கு இணையான அளவில் நெல் என்ற அந்த வரி, எந்த கிராமத்திலும், தலித்துகளிடம் வாங்கப்படுவதில்லை. ஒரு கிராமம் முழுக்க தலித்துகள் வசிக்கிறார்கள் என்றால், அந்த நாட்டுக்கு உட்பட்ட கிராமங்களின் எண்ணிக்கையில் அந்த தலித் கிராமங்களை சேர்க்கவே மாட்டார்கள். உதாரணமாக தெற்கு நத்தம், நாட்டரசன்கோட்டை போன்ற ஊர்களில் முழுக்கவே வசிப்பது தலித்துகள்தான். 'காசவளநாட்டு' கணக்கில் அவற்றை காண முடியாது.

நாடு என்னும் கட்டுமானம் அமைந்திருக்கும் கிராமங்களில் பெரும்பான்மையாக இருப்பது கள்ளர் சாதியைச் சேர்ந்தவர்களே. இவர்கள், தங்கள் சாதி மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ள எல்லா காலங்களிலும் இந்த அமைப்பை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். பழைய சட்டத்திட்டங்கள் அனைத்தும் காலாவதியாகிவிட்டாலும் தலித்துகளுக்கு எதிரான சமயங்களில் மட்டும் எல்லோருக்கும் சட்டென 'நாட்டு'ப்பற்று வந்துவிடுகிறது.

ஏதாவது ஒரு கிராமத்தில் தலித்துகளுக்கும், கள்ளர் சாதியினருக்கும் பிரச்னை என்று வந்துவிட்டால் முதலில் அவர்கள் செய்வது, 'இனிமேல் தலித்துகளுக்கு உள்ளூரில் வேலை கிடையாது' என்று தடை விதிப்பதுதான். வேறு வழியின்றி பக்கத்து ஊர்களுக்கு வேலைக்குப்போனால் அங்கும்போய், 'ஒரு நாட்டுக்காரன்.. நீங்களே இப்படி செய்யலாமா..?' என்று 'நியாயம்' கேட்டு, அந்த நாட்டுக்குட்பட்ட எந்த கிராமங்களிலும் அவர்களுக்கு வேலை கிடைக்காதபடி செய்தால்தான் அவர்களுக்கு நிம்மதி. பொருளாதார ரீதியாக கள்ளர்களின் வயல்களில் விவசாயக்கூலிகளாக இருக்கும் தலித்துகளால் வேறெதுவும் செய்ய இயலாது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சுற்றியிருக்கும் பகுதியில் இந்த நாட்டமைப்பு இப்போதும் முழு அளவில் உயிரோடு இருக்கிறது. உஞ்சனை நாடு, கப்பலூர் நாடு, அஞ்சுக்கோட்டை நாடு, செம்பொன்மாற்றி நாடு, இரவுச்சேரி நாடு.. என்று இந்தப்பகுதி முழுக்கவே நாடுகளாக பிரிவுற்றிருக்கின்றன. தஞ்சையைப் போலல்லாமல் இங்கு, பதினேழரை கிராமங்கள், இருபத்தி இரண்டரை கிராமங்கள் என்று விநோதமான நில அமைப்பில் நாடுகள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு நாட்டுக்கான தலைவரையும் 'நாட்டு அம்பலம்' என்றழைக்கிறார்கள். திருவாடனை தொகுதியின் நடப்பு காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராமசாமிதான் இப்போதைய கப்பலூர் நாட்டுக்கான நாட்டம்பலம் (இதற்கு முன்பு இவரது அப்பா நாட்டம்பலமாக இருந்தார்). அந்த நாட்டுக்குட்பட்ட கிராமங்களின் பிரச்னைகளுக்கு நாட்டம்பலம் சொல்வதே இறுதி தீர்ப்பு. அதை மீறினால் ஊரைவிட்டுத் தள்ளி வைப்பது மாதிரியான நடைமுறைகள் இப்போதும் உயிருடன் இருக்கின்றன.

கண்டதேவி தேரோட்டத்தின்போது தலித்துகளை வடம் பிடிக்கக்கூடாது என்று ஏழரை பண்ணும் கண்டதேவி கிராமம் அமைந்திருப்பது உஞ்சனை நாட்டுக்குள். அந்த சமயத்திலெல்லாம் உஞ்சனை நாட்டு சார்பாக அரசாங்க அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்துவது இந்த நாட்டம்பலம்தான். பெரும்பான்மை கள்ளர்களும், தலித்துகளும், உடையார்களும் வசிக்கும் இந்த தேவக்கோட்டை வட்டார நாட்டு அமைப்புகளின் நாட்டம்பலமாக கள்ளர் சாதியினர் மட்டுமே வர இயலும்.

இந்த நாட்டமைப்பு செய்த சாதி காக்கும் பணியை தென்பகுதியில் பழைய காலத்தில் செய்தவர்கள் பாளையக்காரர்களும், ஜமீன்களும். இவை இரண்டும் வரி வசூலுக்காக ஆங்கிலேயர்களால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்றாலும், தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி சாதி காக்கும் பணியையும் செய்து வந்திருக்கின்றன. கடம்பூர் ஜமீன், நெற்கட்டும்செவல் ஜமீன், சுரண்டை ஜமீன், வீரகேரளம் புதூர் ஜமீன், ஊத்துமலை ஜமீன் (இவை அனைத்திலும் அதிகாரம் செலுத்தியவர்கள் தேவர்கள்..) என்பதாக தெற்கே இருக்கும் இவற்றிற்கு, நாட்டமைப்பு அளவுக்கு நடைமுறையில் இப்போது உயிரில்லை. பெயருக்கு மட்டும் ஜமீன் குடும்பங்கள் இருக்கின்றன. தேனி மாவட்டத்தின் கண்டமனூர் ஜமீனும், பழநிக்கு அருகேயிருக்கும் நெய்காரப்பட்டி ஜமீனும் கிட்டத்தட்ட இல்லாதொழிந்துவிட்டன.

கருத்துகள்

பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
பின்னூட்ட களவானித்தனம்-1
லக்கிலுக் இவ்வாறு கூறியுள்ளார்…
பின்னூட்ட களவானித்தனம்-2 :-)
பட்டுக்கோட்டை பாரி.அரசு இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம் ஆழியூரான்,

மிக முக்கியமான பதிவு, நிச்சயமாக வரலாற்றில் திரிக்கப்படும் என்பது உண்மை.

நாடு என்கிற உட்பிரிவு தோன்றுவதற்க்கு கொஞ்சம் பின்னோக்கி பார்க்க வேண்டும். நாம் நம்முடைய தலைமுறையில் சாதிய கட்டுமானத்தை தாங்கிப்பிடிப்பது நாட்டு பஞ்சாயத்துக்கள் என்று பார்த்து வளர்ந்திருந்தாலும்.

இந்த அடுக்குமுறை சமூக அமைப்பை எப்படி உருவாக்கினார்கள்? யார் உருவாக்கினார்கள்? என்ற கேள்விக்கு விடை தேட வேண்டிய அவசியம் இருக்கிறது.

வாடியக்காடு ஜமீன் (அ) மதுக்கூர் ஜமீன் என்ற அமைப்பில் தற்போதைய மதுக்கூர் ஓன்றியத்தின் பெரும்பாலான கிராமங்கள் இருந்தன. அந்த ஜமீனை எதிர்த்து தான் "வாட்டாக்குடி இரணியன்" போராடினார். ஆனால் ஓர் உண்மையை நாம் மறந்து விடுகிறோம் அந்த ஜமீனின் சாதிய கட்டுமானத்திற்க்கு தூபம் போட்டது யார்? மன்னாங்காடு ஐயர் அல்லவா!

பின்னாளில் ஜமீன் முறை ஓழிந்து முசுறி நாடு உருவான பின்பும் மன்னாங்காடு ஐயரின் ஆதிக்கம் இருந்ததே. அவரை ஓடுக்கி பட்டுக்கோட்டைக்கு நகர்த்தி பின்பு பட்டுக்கோட்டையிலிருந்தும் வெளியேற்றியது திராவிட இயக்கத்தின் வெற்றியல்லவா!

இப்படி பாப்பாநாடு ஜமீன், அதற்க்கு கொட்டை தாங்கிய ஐயர். அவற்றை விட்டுவிட்டு நேரிடையாக பார்க்கப்போனால் சாதிய கட்டுமானம் ஏதோ கள்ளர்கள் உருவாக்குவது போல தெரியும்.

பார்ப்பனர்கள் ஆங்கிலேயர் ஆட்சி வரைக்கும் எவ்வளவு ஆதிக்கம் செலுத்தினார்கள் என்பதையும், பின்னாளில் திராவிட இயக்கத்தால் அவர்கள் ஓடுக்கப்பட்டதையும் கணக்கில் எடுத்துக்கொண்டே தஞ்சை மாவட்டத்தின் சாதிய கட்டுமானத்தை அணுக வேண்டும் என்று நான் எண்ணுகிறேன்.

நன்றி
Ayyanar Viswanath இவ்வாறு கூறியுள்ளார்…
பின்னூட்ட களவானித்தனம்-3

லக்கி சீரியஸ் பதிவுக்கு சிரிக்காம பின்னூட்டம் போடவும்

சீரியசா பின்னூட்டம் போடலாம்னு வந்தேன்..சரி அதுனால என்ன ஆகப்போகுது அட்லீஸ்ட் கும்மியாச்சிம் கள கட்டட்டுமே :)
லக்கிலுக் இவ்வாறு கூறியுள்ளார்…
பின்னூட்ட களவாணித்தனம்-4 :-(
சீனி.செயபால் இவ்வாறு கூறியுள்ளார்…
அன்பி ற்கு இனியவன்.........தம்பி ஆழியூரான்,நீங்க ரொம்பவும்
பயமுறுத்துறிங்க|உங்களின் இடுகைப்பக்கம் போகவே பயமாக இருக்கு(கண்சிமிட்டலைத்தான் சொல்கிறேன்)
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
பின்னூட்ட களவாணித்தனம் +5 ( எல்லாரும் மைனஸ்லயே போட்றீங்க :( )

ஆழியூரான்,

நாடு, ஜமீன் அமைப்புகளின் சாதி கட்டமைப்பு எனக்கு முற்றிலும் புதிய செய்தி.
நேரில் கண்ட வரையில் ஒவ்வொரு கிராமமும் ஒன்றிரண்டு ஆதிக்க சாதிகள் + ஒன்றிரண்டு தாழ்த்தப்பட்ட சாதிகளெனும் நிலையிலேயே பார்த்திருக்கிறேன். அருகருகே இருக்கும் ஊர்களின் வெவ்வேறு ஆதிக்கச்சாதிகள் கூட மற்ற விசயங்களில் அடித்துக் கொண்டாலும் தாழ்த்தப்பட்டவர்களை ஒடுக்குவதில் ஒன்றாய் கை கோர்த்துக் கொள்வதைத்தான் இதுவரை பார்த்திருக்கிறேன். நாடு அமைத்து சாதியைக் கட்டமைக்கும் செய்தி புதிதாய்த்தான் இருக்கிறது.
கையேடு இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம் திரு ஆழியூரான். நீங்கள் குறிப்பிட்டுள்ள பல செய்திகளுடன் உடன்படுகிறேன். இவ்வகை குழு அமைப்பு மற்றும் கிராமக் குழுக்கள் தற்போது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காகப் பயன்பட்டாலும், அவ்வகைப்பண்புகளின் தோற்றம், சாதீய சிந்தனைகள் வேறூன்றுவதற்கு முன்னரே இருந்திருக்கவேண்டும் என்றே கருதுகிறேன். பின்னர் ஆதிக்கத்தை நிலைநாட்ட, இவ்வகைக் குழுஅமைப்பு உதவி புரிந்திருக்கலாமென்றே கருதுகிறேன். எப்படியாயினும் தற்போதைய சூழ்நிலையில் நீங்கள் குறிப்பிட்டிருப்பதுதான் நடைமுறையிலுள்ளது என்ற வகையில் களையப்படவேண்டிய விசயம்தான்.
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
லக்கி, அய்யனார்.. எனக்காக களவானித்தனம் செய்தமைக்கு நன்றி சொல்ல வேண்டுமா..?

பாரி.அரசு... நீங்கள் சுட்டியிருக்கும் விஷயங்கள் எனக்கும் புதிதானவை. மன்னாங்காடு அய்யர் மேட்டர் எங்கேயோ பல வருடங்களுக்கு முன்பு படித்ததாகவோ, கேள்விபட்டதாகவோ மங்களாக நினைவிருக்கிறது. நீங்களும், திரு.கையேடும் சொல்லியிருப்பதுபோல இந்த நாடு என்னும் கட்டமைப்பு நிச்சயமாக உருவானதில்லை. ஜமீன் முறை என்பது 1800 வாக்கில் நம்மிடம் வரி வசூலிப்பதற்காக வெள்ளைக்காரன் உருவாக்கிய முறை. நாடு அப்படியல்ல. அது இனக்குழு வாழ்க்கைமுறையின் மிச்சம் போல தோற்றமளிக்கிறது. ஒருவேளை சேர்ந்து வாழ்தல் என்னும் நன்னோக்கத்தில் உருவான சிஸ்டம் என்றால், எவ்விதம் அடக்குமுறை அமைப்பாக மாறியதென தெரியவில்லை.


திராவிட அமைப்பின் பங்களிப்பு.. அதுவும் ஒரத்தநாடு போன்ற பகுதிகளில் மிகுதியாக இருந்ததென்னவோ உண்மைதான். அதே பகுதியில் இருந்த, இருக்கும் சாதிய கட்டமைப்புகள் அப்போதும், இப்போதும் சிறிதும் குறையாமலிருப்பதைக் காணும்போது வருத்தமாக இருக்கிறது.

நிற்க. இந்த நாடு என்ற அமைப்புப்பற்றி நான் எனக்குத் தெரிந்த, விசாரித்த விவரங்களை மட்டுமே எழுதியிருக்கிறேன். எழுதிய தரவுகளில் எனக்குத் தெரிந்து தவறுகள் இல்லை. ஆனால், இது முழுமையானது இல்லை. தெரிந்தவர்கள், அப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கூடுதல் விவரங்கள் கொடுத்தால் நல்லது.
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
அன்புள்ள அன்பிற்கினியவன்.. ஒரு கவன ஈர்ப்புக்காகவும், நினைவில் வைத்துக்கொள்ளவுமே அந்த கண் சிமிட்டும் படம். ரொம்பவும் பயமுறுத்துகிறதா என்ன..? ஒரு வேளை அது பெண்ணின் கண்ணாக இருந்தால் பயமுறுத்தியிருக்காதோ என்னவோ..?

அருட்பெருங்கோ... நீங்கள் கரூரைச் சேர்ந்தவர்தானே.. அப்பகுதியில் சிலகாலம் பணியாற்றியபோது சில வினோத பழக்க வழக்கங்கள், பேச்சுகள் எனக்கு அறிமுகமாயின. அவற்றைப் பேச இது இடமில்லை. வேறொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
// ஆழியூரான்,நீங்க ரொம்பவும்
பயமுறுத்துறிங்க|//
ஆமா! ஆமா!
K.R.அதியமான் இவ்வாறு கூறியுள்ளார்…
தமிழக நாடர்களின் அபாரமான முன்றேறத்தை பார்த்து தேவர், வன்னியர் போன்ற இதர பிற்பட்ட வகுப்பினர் கற்க வேண்டும். கல்வி மற்றும் வியாபாரம், தொழில் ஆகியவற்றில் சென்ற அரை நூற்றாண்டுகளாக நல்ல முன்னேற்றம் கண்டு நல்ல நிலைமைக்கும் வந்து, ஜாதி சண்டைகளை மறந்து வாழ முற்படுகின்றனர். விருதுநகர், சிவகாசி ஆகிய பகுதிகளில் வேலை வாய்ப்பு பெருக இவர்களே காரணம். கொங்கு நாடுதான் இதைவிட சூப்பர் முன்னேற்றம். கல்வி, பெண்களுக்கு பல் வாய்ப்புகள், விதவை மற்றும் விவாகரத்தான பெண்கள் மறுமணம், தொழில் முன்னேற்றம் ஆகிய பல விசியங்களில் வழிகாட்டுகிறது.
வன்பாக்கம் விஜயராகவன் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழியூரான்

இந்த நாடு சமாசாரம் பழைய நியூஸ். கடந்த 100 வருடங்களில் எழுதப்பட்ட நல்ல சரித்திர, சமூகயியல் புத்தகங்களைப் பாருங்க. உதாரணம் நீலகண்ட சாஸ்திரி. இன்னும் நல்ல புஸ்தகம் Burton Stein ; Medievel South india Agrarian Society'. பர்டன் ஸ்டைன் புத்தகத்தில் குறிக்கப் பட்டிள்ள மற்ற புத்தகங்கலையும் பாருங்கள்

ஆனாலும் நீங்கள் நேர்முக அனுபவத்தின் மீது எழுதுவது, எந்த அளவு சமூக வரலாற்று தொடற்சி இருக்கு என காண்பிக்கிறது.
வன்பாக்கம் விஜயராகவன் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழியூரான்

இந்த நாடு சமாசாரம் பழைய நியூஸ். கடந்த 100 வருடங்களில் எழுதப்பட்ட நல்ல சரித்திர, சமூகயியல் புத்தகங்களைப் பாருங்க. உதாரணம் நீலகண்ட சாஸ்திரி. இன்னும் நல்ல புஸ்தகம் Burton Stein ; Medievel South india Agrarian Society'. பர்டன் ஸ்டைன் புத்தகத்தில் குறிக்கப் பட்டிள்ள மற்ற புத்தகங்கலையும் பாருங்கள்

ஆனாலும் நீங்கள் நேர்முக அனுபவத்தின் மீது எழுதுவது, எந்த அளவு சமூக வரலாற்று தொடற்சி இருக்கு என காண்பிக்கிறது.
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
??????????..... எழுதும்போது எனக்கே தெரிந்ததுதான், இது புதிதில்லை என்று. இருந்தாலும் இங்கு இணையத்தில் புழங்கும் சிலருக்கு இது புதியனவாக இருக்கலாம் என்ற எண்ணத்தில்தான் எழுதினேன். நீங்கள் சொல்லியிருக்கும் மற்ற புத்தகங்களை வாய்ப்புக் கிடைக்கும்போது வாசிக்கிறேன். சிரத்தையெடுத்து உதாரணங்களுடன் கருத்து சொன்னமைக்கு நன்றி.

ஒரு சின்ன டவுட்.. நீங்க ரொம்ப கேள்வி கேப்பீங்களா..?
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Intha naadu murai cholar mannar kalathil erunthu ullathu.
நாடோடி இலக்கியன் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழியூரான்!
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் நாடுகளில் ஒன்றான கோனூர் நாட்டில் கள்ளர் சாதியினர்தான் பெரும்பான்மையினர்,ஆனால் நீங்கள் சொல்வது போல் அவர்கள் தலித்துகளை அடக்கி வைப்பதெல்லாம் இல்லை.தலித் வீட்டிற்குச் சென்று கள்ளர் வீட்டு குழந்தைகள் டீயூசன் படிக்கிறார்கள்,தலித் கடைகளில் பொருட்கள் வாங்குகிறார்கள் ,வசதி படைத்த தலித் நிலத்தில் உயர் சாதியை சார்ந்த கூலித்தொழிளாலிகள் வேலை செய்வதெல்லாம் இப்போ சாதாரணமாகிவிட்டது.நீங்கள் குறிபிடுவது போல் கள்ளர் அதிகம் இருக்கிறார்களே தவிர ஆதிக்கமெல்லாம் செலுத்துவதில்லை.இதை ஏன் சொல்கிறேன் என்றால் உங்கள் பதிவில் கள்ளர்கள், சாதி வெறியர்கள் போன்ற ஒரு தோற்றம் இருக்கிறது.
முரளிகண்ணன் இவ்வாறு கூறியுள்ளார்…
please change the eye
மு.குருமூர்த்தி இவ்வாறு கூறியுள்ளார்…
இது நல்ல பதிவு. தேவையானதும்கூட.

"நீங்கள் குறிப்பிட்டிருக்கும் நாடுகளில் ஒன்றான கோனூர் நாட்டில் கள்ளர் சாதியினர்தான் பெரும்பான்மையினர்,ஆனால் நீங்கள் சொல்வது போல் அவர்கள் தலித்துகளை அடக்கி வைப்பதெல்லாம் இல்லை" என்ற பின்னூட்டம் எவ்வளவு உண்மையானது என்று தெரிந்துகொள்ள ஒரு துக்கவீட்டிற்குப்போனால் போதும். யதார்த்தம் தெளிவாகப்ப்புரிந்து போகும். அங்கே வலுத்தகுரலுக்கு சொந்தக்காரர்களாக இருப்பவர்கள் எல்லா "கரை"வேட்டிகளையும் கட்டியிருப்பதுதான் துக்கவீட்டின் மிகப்பெரிய சோகம்.

மு.குருமூர்த்தி
ஆசிரியர்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதனால் ஆன பயனென்ன..?

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!

கோயில்கள் யாருக்கு? - இந்து சமய அறநிலையத் துறையின் வரலாறு